எல்பிஎல் 2022: குர்பாஸ், ஃபெர்னாண்டோ அசத்தல்; ஜாஃப்னா கிங்ஸ் அபார வெற்றி!
லங்கா பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ச் - கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணி பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கொழும்பு அணியின் தொடக்க வீரர்கள் தினேஷ் சண்டிமல், நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டுகளை இழந்தனர். அதனைத் தொடர்ந்து வந்த அசலங்கா, தனஞ்செயா, முகமது நபி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் நிஷான் மதுஷங்கா 35 ரன்களையும், டோமினிக் டார்க்ஸ் 38 ரன்களையும் சேர்த்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்தது. ஜாஃப்னா கிங்ஸ் தரப்பில் திசாரா பெரேரா, சோயிப் மாலிக் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ஜாஃப்னா கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஃபெர்னாண்டோ 40 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் அரைசதம் கடந்து அசத்தினர். பின் 40 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசிய குர்பாஸ் 69 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அணியை ஏறத்தாழ வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இதன்மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணி 15.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் கொழும்பு ஸ்டார்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.