எல்பிஎல் 2023: கலே டைட்டைன்ஸை வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் அபார வெற்றி!
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் - கலே டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கலே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கலே அணிக்கு ஷெவோன் டேனியல் - லசித் க்ரூஸ்புலெ இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஷெவோன் டேனியல் 25 ரன்களிலும், க்ரூஸ்புலே 19 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பனுகா ரஜபக்ஷா முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய செய்ஃபெர்ட் 18 ரன்களுக்கும், ஷாகிப் அல் ஹசன் 6, கேப்டன் தசுன் ஷனகா 30 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் கலே டைட்டன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்தது. ஜாஃப்னா அணி தரப்பில் துனித் வெல்லலகே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜாஃப்னா அணியில் தொடக்க வீரர் சரித் அசலங்கா 5 ரன்களுக்கு ஆட்டாமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - தாஹித் ஹிரிடோய் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் அரைசதம் கடந்தார்.
அதன்பின் 3 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசி 54 ரன்களை எடுத்திருந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை காளத்தில் இருந்த ஹிரிடோய் 4 சிக்சர்கள், 2 பவுண்டரி என 44 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணி 12.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் கலே டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்திய துனித் வெல்லலகே ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.