ஐபிஎல் தொடரை பின்பற்றி இலங்கையில் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் 4 சீசன்களைக் கடந்த 5ஆவது சீசனில் காலடியெடுத்து வைத்துள்ளது. அந்தவகையில் இன்று தொடங்கிய 5ஆவது சீசன் லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கண்டி ஃபால்கன்ஸ் அணியை எதிர்த்து தம்புளா சிக்ஸர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது.
பல்லகலேவில் நடைபெற்ற இப்போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் அணி முதலில் பந்துவிசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தம்புலா சிக்ஸர்ஸ் அணிக்கு தனுஷ்கா குணத்திலகா - குசால் பெரேரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தனுஷ்கா குணத்திலகா 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து குசால் பெரேரா ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து வந்த நுவநிந்து ஃபெர்னாண்டோ, தாவ்ஹித் ஹிரிடோய் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் அந்த அணி 25 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த மார்க் சாப்மேன் மற்றும் சமிந்து விக்ரமசிங்கே இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடி வந்த இருவரும் அரைசதங்களைப் பதிவுசெய்ய, அணியின் ஸ்கோரும் 150 ரன்களைக் கடந்தது.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்க் சாப்மேன் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 91 ரன்களையும், சமிந்து விக்ரமசிங்கே 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 62 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் தம்புளா சிக்ஸர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைக் குவித்தது. கண்டி ஃபால்கன்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தசுன் ஷனகா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு தினேஷ் சண்டிமல் மற்றும் ஆண்ட்ரே ஃபிளெட்சர் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆண்ட்ரே ஃபிளெட்சர் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸும் 5 ரன்களில் நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார். பின்னர் சண்டிமலுடன் இணைந்த கமிந்து மெண்டிஸ் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார்.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய தினேஷ் சண்டிமல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 27 ரன்கள் எடுத்திருந்த கமிந்து மெண்டிஸ் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தினேஷ் சண்டிமலும் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 65 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அனுபவ வீரர்கள் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தசுன் ஷனகா இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச்செல்லும் முயற்சியில் இறங்கினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய ஏஞ்சலோ மேத்யூஸ் 5 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட் 37 ரன்களையும், தசுன் ஷனகா 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 46 ரன்களையும் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் கண்டி ஃபால்கன்ஸ் அணியானது 17.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் தம்புளா சிக்ஸர்ஸ் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு லங்கா பிரீமியர் லீக் தொடரையும் அபார வெற்றியுடன் தொடங்கியுள்ளது. மேலும் இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கிய தசுன் ஷனகா ஆட்டநாயகன் விருதை வெல்வார் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.