லங்கா பிரீமியர் லீக் (Lanka Premier League) கிரிக்கெட் தொடரின் 5ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் தம்புளா சிக்ஸர்ஸ் அணியை எதிர்த்து ஜாஃப்னா கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. பல்லகலேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தம்புளா சிக்ஸர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய தம்புளா சிக்ஸர்ஸ் அணிக்கு தனுஷ்கா குணத்திலகா மற்றும் குசால் பெரேரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குணத்திலகா 9 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த குசால் பெரேரா - நுவனிந்து ஃபெர்னாண்டோ இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். 

Advertisement

பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபெர்னாண்டோ 40 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குசால் பெரேரா 10 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 102 ரன்களை விளாசினார். இதன்மூலம் தம்புளா சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்ததுடன் 191 ரன்களையும் குவித்தது. ஜாஃப்னா அணி தரப்பில் தனஞ்செயா டி சில்வா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியில் குசால் மெண்டிஸ் 6 ரன்களிலும், பதும் நிஷங்கா 27 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரைலீ ரூஸொவும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக ஜாஃப்னா அணியானது 26 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் ஜோடி சேர்ந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் கேப்டன் சரித் அசலங்கா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மள்மளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் அரைசதம் அடிக்கும், 5ஆவது விக்கெட்டிற்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர். 

அதன்பின் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சரித் அசலங்கா விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 80 ரன்களை எடுத்திருந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோவும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் களமிறங்கிய தனஞ்செயா டி சில்வாவும் 9 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, ஜாஃப்னா அணி 182 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

இதனால் எந்த அணி வெற்றிபெறும் என்ற பரபரப்பு நீடித்த நிலையில், ஃபேபியன் ஆலன் 11 ரன்களையும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 4 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஜாஃப்னா கிங்ஸ் அணியானது கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் தம்புலா சிக்ஸர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இப்போட்டியின் வெற்றிக்கு உதவிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆட்டநாயகன் விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News