இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்ற இத்தொடரில் கலே மார்வெல்ஸ், ஜாஃப்னா கிங்ஸ், கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ், கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதையடுத்து இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. இதில் இன்று நடைபெற்ற குவாலிஃபையர் ஒன்றில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களை பிடித்திருந்த கலே மார்வெல்ஸ் - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற கலே மார்வெல்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜாஃப்னா கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் பதும் நிஷங்கா 4 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த குசால் மெண்டிஸ் - ரைலீ ரூஸோவ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்திருந்த ரைலீ ரூஸோவ் தனது விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குசால் மெண்டிஸும் 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் களமிறங்கிய சரித் அசலங்கா 7 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். ஆனாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவிஷ்கா ஃபெர்னாண்டோ அரைசதம் கடந்த நிலையில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 52 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தனஞ்செயா டி சில்வா, ஃபேபியன் ஆலன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் ஜாஃப்னா கிங்ஸ் அணியானது 7 விக்கெட்டுகளை இழந்தாலும் 177 ரன்களைக் குவித்தது. கலே மார்வெல்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய டுவைன் பிரிட்டோரியஸ் 4 விக்கெட்டுகளையும், இசுரு உதானா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கலே மார்வெல்ஸ் அணியிலும் கேப்டன் மற்றும் தொடக்க வீரரான நிரோஷன் டிக்வெல்லா 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த அலெக்ஸ் ஹேல்ஸ் - டிம் செய்ஃபெர்ட் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் பொறுப்புடன் விளையாடி வந்த டிம் செய்ஃபெர்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய ஜனித் லியானகேவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த அணியின் வெற்றியும் எளிதானது. இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியைத் தேடித்தருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜனித் லியானகே 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 

ஆனாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் செய்ஃபெர்ட் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 62 ரன்களைக் குவித்ததுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கலே மார்வெல்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு சீசன் எல்பிஎல் தொடரில் முதல் அணியாகவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய டுவைன் பிரிட்டோரியஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News