எல்பிஎல் 2022: ஃபேபியன் ஆலன் கேமியோவால் கண்டி ஃபால்கன்ஸ் வெற்றி!

Updated: Wed, Dec 14 2022 23:02 IST
Image Source: Google

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் - ஜாஃப்னா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கண்டி ஃபால்கன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியின் பதும் நிஷங்கா 15ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கமிந்து மெண்டிஸ் 11 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஆண்ட்ரே ஃபிளட்செர் - அஷென் பண்டாரா ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

பின்னர் 24 ரன்களில் பண்டாரா விக்கெட்டை இழக்க, 35 ரன்களோடும் ஃபிளட்சரும் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கார்லோஸ் பிராத்வையிட், நஜிபுல்லா ஸத்ரான், வநிந்து ஹசரங்கா ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஃபேபியன் ஆலன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 சிக்சர், 3 பவுண்டரிகள் என 47 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கண்டி ஃபால்கன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது. ஜாஃப்னா கிங்ஸ் அணி தரப்பில் வெல்லக, தில்சன் மதுசங்கா, வக்கர் சலாம்கெய்ல், ஜேம்ஸ் ஃபுல்லார் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை துரத்தி ஜாஃப்னா கிங்ஸ் அணியிலும் ரஹ்மனுல்ல குர்பாஸ், தனஞ்செய டி சில்வா சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ - சதீரா சமரவிக்ரமனா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

அதன்பின் 33 ரன்களில் ஃபெர்னாண்டோ ஆட்டமிழக்க, அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தனஞ்செய டி சில்வா 48 ரன்களோடு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து களமிறங்கிய சோயிப் மாலிக், திசாரா பெரேரா என நட்சத்திர வீரர்களும் சோபிக்க தவறினர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை மட்டுமே சேர்த்தது. கண்டி ஃபால்கன்ஸ் அணி தரப்பில் கார்லோஸ் பிராத்வையிட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் கண்டி ஃபால்கன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை