ஐசிசி டி20 தரவரிசை: ஆல் ரவுண்டர்களில் முதலிடத்திற்கு முன்னேறினார் மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசனானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், அமெரிக்க உள்ளிட்ட 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அதேசமயம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் 5 இடங்கள் முன்னேறி 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் 8 இடங்கள் முன்னேறி 11ஆம் இடத்தையும், ஜான்சன் சார்லஸ் 5 இடங்கள் முன்னேறி 14ஆம் இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர். மேலும் இந்திய அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் பின் தங்கி 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் ஆதில் ரஷித் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். அதேசமயம் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் அகீல் ஹொசைன் 6 இடங்கள் முன்னேறி 2ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். அதேபோல் மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரான அல்ஸாரி ஜோசப்பும் 6 இடங்கள் முன்னேறி 11ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணி தரப்பில் அக்ஸர் படேல் 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆஃப்கானிஸ்தானின் முகமது நபியை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டொய்னிஸ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரில் பேட்டிங், பவுலிங்கில் அசத்தி வரும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேசமயம் முதலிடத்தில் இருந்த முகமது நபி மூன்று இடங்கள் பின் தங்கி 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்த பட்டியலில் இலங்கை அணியின் வநிந்து ஹசரங்கா இரண்டாம் இடத்திற்கும், வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளனர். இப்பட்டியலில் நேபாள் அணியை சேர்ந்த தீபேந்திர சின் ஐரி 3 இடங்கள் முன்னேறி 6ஆம் இடத்தையும், இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா ஒரு இடம் முன்னேறி 7ஆம் இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.