AUSW vs SAW, 2nd ODI: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மரிஸான் கேப்; ஆஸியை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!

Updated: Wed, Feb 07 2024 20:13 IST
AUSW vs SAW, 2nd ODI: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய மரிஸான் கேப்; ஆஸியை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்க மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் லாராவோல்வார்ட் ரன்கள் ஏதுமின்றியும், தஸ்மின் பிரிட்ஸ் 21 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த போஷ் - சுனே லூஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் சுனே லூஸ் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போஷ் 44 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய மரிஸான் கேப் - சோலே ட்ரையான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவெ உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மரிஸான் கேப் அரைசதம் கடந்ததுடன் 75 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மேகன் ஷட், ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீராங்கனைகள் கேப்டன் அலிசா ஹீலி 4 ரன்களிலும், ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 14 ரன்களிலும், பெத் மூனி ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய எல்லிஸ் பெர்ரி, அனபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வர்ஹாம் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, 59 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்தது. 

அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட தஹிலா மெக்ராத் 22 ரன்களிலும், ஆஷ்லே கார்ட்னர் 35 ரன்களிலும், கிம் கார்த் 42 ரன்களையும் சேர்த்த நிலையில் மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இதனால் ஆஸ்திரேலிய மகளிர் அணி 29.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மரிஸான் கேப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளி அணியை வீழ்த்தியதுடன், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. இப்போட்டியில் பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய மரிஸான் கேப் ஆட்டநாயகியாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை