அஸ்வினுடனான உரையாடல் குறித்து மனம் திறந்த லபுசாக்னே!
இந்திய மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா 3ஆவது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2004க்குப்பின் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டாலும், தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துள்ளது.
முன்னதாக இத்தொடரில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வினை சாய்ப்பதற்காக மகேஷ் பிதியா எனும் லோக்கல் ஸ்பின்னரை தேடிப்பிடித்து ஆஸ்திரேலிய அணியினர் தீவிர வலைப்பயிற்சிசில் ஈடுபட்டதை மறக்க முடியாது. ஆனால் அவர்களது திட்டங்களை தவிடு பொடியாக்கிய அஸ்வின் இதுவரை வெற்றிகரமாகவே செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 2ஆவது போட்டியில் உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களான மார்னஸ் லபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரையுமே ஒரே ஓவரில் அவுட்டாக்கிய அவர் உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக முன்னேறி சாதனை படைத்தார் அஸ்வின்.
இருப்பினும் 3வது போட்டியில் வெற்றி கைநழுவி சென்ற போது களத்தில் இருந்த லபுசாக்னே எப்படியாவது அவுட் செய்ய வேண்டும் என்று நினைத்த அஸ்வின் தன்னுடைய ஓட்டத்தில் ஒரு சில நடைகளை குறைத்து பந்து வீச முடிவெடுத்தார். ஆனால் அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த விடக்கூடாது என்று நினைத்த மார்னஸ் லபுஸ்ஷேன் பேட்டிங் செய்யும் இடத்திலிருந்து வேண்டுமென்றே விலகிச் சென்று வாயில் சுமிங்கமை மென்று நேரத்தை தாமதப்படுத்தினார்.
அதனால் அதிருப்தியடைந்த அஸ்வினை விட கடுப்பான நடுவர் ஜோயல் வில்சன் நேரடியாக அவரிடம் சென்று ஒழுங்காக பேட்டிங் செய்யுங்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். சமூக வலைதளங்களில் வைரலான அந்த நிகழ்வு பற்றியும் 4ஆவது போட்டியில் தமது திட்டங்களை செயல்படுத்தி வெற்றி பெற முயற்சிக்கு உள்ளதை பற்றியும் மார்னஸ் லபுசாக்னே பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அஸ்வின் திடீரென்று தனது நடையை குறைத்ததை நான் பார்க்கவில்லை. ஏனெனில் நான் அவருடைய பழைய ரன் அப்புக்கு ஏற்றார் போல் பேட்டிங் செய்து கொண்டிருந்தேன். அதனால் பந்தை எதிர்கொள்ளப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்த நான் சிலமுறை எதிர்கொள்ளாமல் விலகிச் சென்றேன். அப்போது எனது அருகே வந்த நடுவர் ஜோயல் வில்சன் அஷ்வின் பந்து வீச தயாராகும் போது நீங்கள் அதை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு நான் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள தயார் ஆனால் நான் தயாராவதற்கு முன்பாக அஸ்வின் பந்து வீச முயற்சிக்கிறார் என்று நடுவரிடம் பதிலளித்தேன்.
இதுவும் சதுரங்க விளையாட்டை போன்ற ஒரு வகையான போட்டியாகும். அதாவது அஸ்வின் அந்த சமயத்தில் நான் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் திட்டத்திலிருந்து என்னை வெளியே கொண்டு வர நினைத்தார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். ஏனெனில் அந்தப் போட்டியில் அந்த சமயத்தில் வெற்றி கை நழுவி விட்டது என்று தெரிந்தும் அவர் இது போன்ற சிறு சிறு விஷயங்களில் பெரிய கவனம் செலுத்துகிறார். அதனால் தான் நானும் சிரித்த முகத்துடன் அந்த சமயத்தில் பேட்டிங் செய்தேன். அவருடைய முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். அது தான் மிகச் சிறந்த கிரிக்கெட்டாகும்.
இது நீங்கள் என்ன எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்று எதிர்பார்ப்பதற்கும் உண்மையாக என்ன எதிர்கொள்கிறீர்கள் என்பதற்கும் இடைப்பட்ட வித்தியாசமாகும். இந்த தொடரில் அதிகமாக விளையாடும் போது எனது தடுப்பாட்டத்தை நம்ப வேண்டும் என்று நான் புரிந்து கொண்டேன்.பொதுவாக எந்த அறிவையும் நீங்கள் தோல்வியை சந்திக்காமல் கற்றுக் கொள்வது மிகவும் கடினமாகும்.
அந்த வகையில் தற்போது இந்த தொடரை திரும்பிப் பார்க்கும் போது நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியின் முதல் நாளில் நான் சதத்தை தவற விட்டேன் என்பதை உணர்கிறேன். அத்துடன் உங்களது கேரியரிலேயே இந்த தொடரின் ஒரு போட்டியில் மிகச்சிறந்த பிட்ச்சில் விளையாடினீர்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. அதைப் புரிந்து கொண்டும் அந்த சமயங்களில் நிலைமை உங்களுடைய திட்டத்திற்கு வெளியே சென்றது” என்று தெரிவித்துள்ளார்.