ஆக்ரோஷம் காட்டிய முகமது சிராஜ்; அபராதம் விதித்த ஐசிசி!

Updated: Mon, Jul 14 2025 13:34 IST
Image Source: Google

Mohammad Siraj has been fined: இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஐசிசி நடத்தை விதிகளை மீறியுள்ளார். 

லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியும் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானதுடன் ஸ்கோரையும் சமன்செய்தது.

இதனால் முன்னிலை ஏதுமின்றி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 40 ரன்களையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கவில்லை. இதனால் அந்த அணி 192 ரன்களிலேயே ஆல் அவுட்டானதுடன் 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்களைச் சேர்த்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியின் போது ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக முகமது சிராஜிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்டின் விக்கெட்டை முகமது சிராஜ் கைப்பற்றி இருந்தார். அப்போது விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் முகமது சிராஜ் ஆக்ரோஷமாக கொண்டாடியதுடன் பென் டக்கெட்டையும் வம்பிழுக்கும் வகையில் அவரை இடித்துத்தள்ளினார். இதனால் அப்போது கள நடுவர் சிராஜிக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தனர். 

இந்நிலையில் ஐசிசி நடத்தை விதிகள் 2.5 படி, ஒரு சர்வதேச போட்டியின் போது ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்தவுடன் அவரை இழிவுபடுத்தும் அல்லது ஆக்ரோஷமான எதிர்வினையைத் தூண்டக்கூடிய மொழி, செயல்கள் அல்லது சைகைகளைப் பந்துவீச்சாளர் வெளிப்படுத்துவது குற்றமாகும். அதனடிப்படையில் முகமது சிராஜிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதமும், ஒரு கருப்பு புள்ளியையும் ஐசிசி அபராதமாக விதித்துள்ளது.

Also Read: LIVE Cricket Score

இதன்மூலம் முகமது சிராஜ் கடந்த 24 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக ஐசிசியின் கருப்பு புள்ளியைப் பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் போதும் இதே குற்றத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. மேலும் சிராஜ் தனது அபராதத்தை ஏற்றுக்கொண்டதன் காரணமாக மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என்பதையும் ஐசிசி தெளிப்படுத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை