ஷுப்மன் கில் நலமுடன் இருக்கிறார் - விக்ரம் ரத்தோர்!

Updated: Wed, Oct 11 2023 13:08 IST
ஷுப்மன் கில் நலமுடன் இருக்கிறார் - விக்ரம் ரத்தோர்! (Image Source: Google)

இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லியில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து இரண்டு நாட்கள் கழித்து சனிக்கிழமை குஜராத் அகமதாபாத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. தற்போது இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இதன் காரணமாக அவர் டெல்லியில் நடக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டது. அதே சமயத்தில் மிக முக்கியமான போட்டியான அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் கில் விளையாடுவாரா? மாட்டாரா? என்கின்ற எதிர்பார்ப்பு விளையாட்டு மட்டத்தில் மிக அதிகமாக இருந்து வருகிறது.

மேலும் அவருக்கு குஜராத் அகமதாபாத் மைதானம் ஐபிஎல் தொடரில் சொந்த மைதானம் ஆகும். இது மட்டும் இல்லாமல் அவர் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் சர்வதேச போட்டிகளிலும் மிகச் சிறப்பாக ஆடி சதங்களை குவித்துள்ளார். இதன் காரணமாக அவர் பாகிஸ்தானுக்கு எதிரான மிக முக்கிய ஆட்டத்தில் விளையாட வேண்டும் என்று அணி நிர்வாகம் மற்றும் அணி ரசிகர்கள் அனைவரும் விரும்புகிறார்கள்.

இந்த நிலையில் அணி உடன் கிளம்பி டெல்லி செல்லாமல், சென்னையில் தங்கி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்ற கில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் சென்னையில் இருப்பாரா? பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவாரா? என்ற கேள்வி இருந்தது.

இந்நிலையில், கில் இன்று சென்னையில் இருந்து குஜராத் அகமதாபாத்துக்கு கமர்சியல் பிளைட்டில் செல்கிறார். அவர் தொடர்ந்து குணம் அடைந்து அங்கேயே இருந்து ஓய்வு எடுப்பார். அவர் பிசிசிஐ மருத்துவ கண்காணிப்பின் கீழ் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட வைப்பதற்கு இந்திய நிர்வாகம் முயற்சி செய்கிறது என்று தெரிகிறது.

இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறும் பொழுது, “ஷுப்மன் கில் நலமுடன் இருக்கிறார். முதலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தற்பொழுது ஹோட்டலுக்கு திரும்பி இருக்கிறார். மருத்துவக் குழு தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில், நாங்கள் புதுப்பிப்பு செய்து கொள்வோம்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை