மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை -மைக்கேல் கிளார்க்!

Updated: Fri, Dec 20 2024 21:01 IST
Image Source: Google

இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.

மழைக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியானது முடிவு எட்டபடாமல் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளும் இத்தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனிலையில் நீடித்து வருகின்றனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதில் மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளது. 

இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. இதில் நாதன் மெக்ஸ்வீனி அணியில் இருந்து நீக்கப்பட்டு மற்றொரு அறிமுக வீரரான சாம் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாதன் மெக்ஸ்வீனியை நீக்கியது குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “நாதன் மெக்ஸ்வீனி ஆஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. தொடக்க நிலையில் யாரை தேர்வு செய்தாலும் பரவாயில்லை, தொடர் முழுவதும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். தேர்வாளர்கள் தவறு செய்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் மூத்த வீரரான உஸ்மான் கவாஜா 38 ரன்கள் எடுத்ததை தவிர்த்து பெரிதளவில் ரன் ஏதும் எடுக்கவில்லை.

மேலும் எங்களிடம் மார்னஸ் லாபுஷாக்னே இருக்கிறார், அவர் தொடருக்கு முன்பு அழுத்தத்தில் இருந்தார். தற்போது அவர் நன்றாக விளையாடி வருகிறார். ஸ்டீவ் ஸ்மித் ஒரு சிறந்த வீரரைப் போல பேட்டிங் செய்து போராடி சதம் அடித்தார், ஆனால் அவரும் அழுத்தத்தில் இருக்கிறார். மெக்ஸ்வீனியைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவ்ரும் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள். ஒருவேளை தற்பொது உஸ்மான் கவாஜா ஓய்வு பெற்றால் என்ன நடக்கும்? மெக்ஸ்வீனி அணிக்கு திரும்புவாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்திய அணிக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் நாதன் மெக்ஸ்வீனி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த மூன்று போட்டிகளில் அவரால் 72 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதேசமயம் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள சாம் கொன்ஸ்டாஸ் சிறந்த ஃபார்மில் உள்ளார். இவர் இந்திய் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் சதமடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே, நாதன் லையன், மிட்செல் மார்ஷ், ஜெய் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை