விராட் கோலி குறித்து கருத்து கூறிய வாகன்; கொந்தழித்த ரசிகர்கள்!
இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்-க்கும் கேப்டனாக விளங்கிய விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சதம் அடிக்காமல் இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக அவரது பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருப்பதற்கு அவரது கேப்டன்சி-யும் ஒரு முக்கியமான தடையாக பேசப்பட்டது. இதன் காரணமாக பணிச் சுமையை குறைக்கும் நோக்கில் டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி கேப்டன் பதவியை துறந்தார்.
இந்நிலையில் தற்போது ஒரு நாள் கிரிக்கெட்டிலும் விராட் கோலியின் கேப்டன் பதவி பிசிசிஐ-யால் பறிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்க விரும்புவதாக கோலி கூறியும் அதனை பிசிசிஐ ஏற்க மறுத்துவிட்டதால் கோலியின் பதவியை பறித்துள்ளது.
மேலும் இனி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்க்கு ரோஹித் கேப்டனாகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியும் கேப்டனாக செயல்படுவார்கள் என்று அறிவித்தது. இந்நிலையில் அடுத்ததாக நடைபெறவிருக்கும் தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து ரோகித் சர்மா ஒருநாள் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் ரோகித் சர்மா ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்று வெளியான ட்வீட் ஒன்றுக்கு பதிலளித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் “Very Good Decision” என்று தம்ப்ஸ் அப் எமோஜியையும் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது விராட் கோலியின் ரசிகர்களிடையே அதிக அளவு கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் எப்போதுமே இந்திய அணியையும், இந்திய அணி வீரர்களையும் சற்று தரம் தாழ்த்தி பேசும் மைக்கல் வாகன் தற்போது ரோஹித் சர்மாவை வாழ்த்துவது போல வாழ்த்தி விராட் கோலியை மறைமுகமாக தரம் தாழ்த்தி உள்ளார். இதன் காரணமாக கோலியின் ரசிகர்களும் அவரது இந்த ட்வீட்டிற்கு தங்களது சரமாரியான விமர்சனங்களை பதிலாக அளித்து வருவது குறிப்பிடத்தக்கது