இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது தொடக்கம் முதலே சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின்னர் இணைந்த அணியின் கேப்டன் தனஞ்செயா டி சில்வா மற்றும் அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்க இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தனஞ்செயா டி சில்வா 74 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 72 ரன்களையும் எடுத்திருந்த அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்காவும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இதனால் இலங்கை அணியானது முதல் இன்னிங்ஸில் 236 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஷோயப் பஷீர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 22 ரன்களைச் சேர்த்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய மிலன் ரத்நாயக்க சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்து அசத்தியுள்ளார். அதன்படி, அறிமுக டெஸ்டில் ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் செய்த மிலன் ரத்நாயக்க அதிக ரன்களைச் சேர்த்து சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் இந்திய வீரர் பல்விந்தர் சிங் சந்து 71 ரன்களைச் சேர்த்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை ரத்நாயக்கா 72 ரன்களைச் சேர்த்து சாதனை படைத்துள்ளார்.
இது தவிர, மிலன் ரத்நாயக்க தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஒன்பதாவது அல்லது அதற்கும் குறைவாக இடத்தில் களமிறங்கி அரை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இங்கிலாந்து அணியானது 214 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணியானது இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
அறிமுக டெஸ்ட்டில் 9ஆவது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் எத்த வீரர்கள்
- 72 - மிலன் ரத்நாயக்க vs இங்கிலாந்து, மான்செஸ்டர், 2024
- 71 - பல்விந்தர் சிங் சந்து vs பாகிஸ்தான், ஹைதராபாத், 1983
- 65 - டேரன் கோஃப் vs நியூசிலாந்து, மான்செஸ்டர், 1994