சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை அழுத்தத்தில் தள்ளினர் - மிட்செல் சான்ட்னர்!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் - அக்ஸர் படேல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அக்ஸர் படேல் 42 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதியில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 45 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்ததுடன் 81 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அந்த அணியின் மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர்.
இதனால் நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர், “நாங்கள் எதிர்கொண்டதை விட இது மெதுவான விக்கெட்டாக இருந்தது. இதில் இந்திய அணி மிடில் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டது. அச்சயமத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் அற்புதமாக பேட்டிங் செய்தார், இறுதியில் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். மேலும் அவர்களின் நான்கு தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை அழுத்தத்தில் தள்ளினர்.
Also Read: Funding To Save Test Cricket
பவர்பிளேயில் விக்கெட்டுகளை எடுப்பது எங்களுக்கு முக்கியமானது, அதைப் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. எங்களின் அடுத்த ஆட்டம் லாகூரில் நடைபெறவுள்ளது. அங்கு மேட் ஹென்றி முக்கிய வீரராக இருப்பார் என்று நம்புகிறேன். தென் ஆப்பிரிக்காவிடமும் நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எனவே நாங்கள் அவர்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி யோசிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.