ENG vs NZ: இரண்டாவது டெஸ்ட்டிலிருந்து சாண்ட்னர் விலகல்; வில்லியம்சன் சந்தேகம்!
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஜூன் 2ஆம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் வெற்றியாளர் இன்றி முடிந்ததால் அப்போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 10ஆம் தேதி பர்மிங்ஹாமில் நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தில் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் சாண்ட்னர் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்னிற்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால், இப்போட்டியில் விளையாட முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதுகுறித்து நியூசிலாந்து அணி ட்விட்டர் பதிவில், இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக மிட்செல் சாண்ட்னர் பங்கேற்க மாட்டார் என்றும், கேப்டன் வில்லியம்சன்னின் காயம் குறித்து இன்று அறிவிக்கபடும் என்றும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் விளையாடுவார் என்றும் அறிவித்துள்ளது.
ஒருவேளை நாளைய போட்டியில் வில்லியம்சன் அணியில் இடம்பெறாத பட்சத்தில் அணியின் கேப்டன் பதவி அனுபவ வீரர்களான டிம் சௌதி, ராஸ் டெய்லர் ஆகியோருக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.