ரச்சின் - வில்லியம்சன் எங்களுக்கான அடித்தளத்தை அமைத்தனர் - மிட்செல் சான்ட்னர்!
நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி வெற்றிக்குப் பிறகு தனது அணியின் செயல்திறனைப் பாராட்டி, இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டி குறித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார். மேலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஒரு பெரிய உணர்வு என்றும், தென்னாப்பிரிக்கா போன்ற வலுவான அணிக்கு எதிரான இந்த வெற்றி எளிதானது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
இத்குறித்து பேசிய சான்ட்னர், “இப்போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்ததாக நாங்கள் துபாய் சென்று மீண்டும் இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளோம். இப்போட்டியில் ரச்சின் ரவீந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து எங்களுக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதன்மூலம் இறுதியில் எங்களால் ரன்களை சேர்க்க முடிந்தது.
பந்துவீச்சிலும் நாங்கள் எதிரணிக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தோம். இன்று மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இது எனது வேலையை எளிதாக்குகிறது, சுழற்பந்து வீச்சாளர்களை வீசக்கூடிய நான்கு ஆல்ரவுண்டர்கள் எங்களிடம் உள்ளனர், அவர்களால் பேட்டிங் செய்ய முடியும். ரச்சினின் ஐந்து ஓவர்கள் சிறப்பாக இருந்தன, மாட் ஹென்றியின் தோள்பட்டை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
அவருக்கு இன்னும் கொஞ்சம் வலி உள்ளது. அதனை இரண்டு நாள்களுக்கு பிறகு தான் அவரது உடற்தகுதி குறித்து தெரியவரும். தென் ஆப்பிரிக்க அணி இப்போட்டியில் எங்களுக்கு சவாலாக இருந்தது. அதே சவால் இந்தியாவுக்கு எதிராகவும் இருக்கும். ஆனால் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என்று நினைக்கிறேன். மேலும் அங்கு டாஸ் வெல்வதும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று சான்ட்னர் தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டி குறித்து பேசினால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூநிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 362 ரன்களைச் சேர்த்த நிலையில், அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 312 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய ரச்சின் ரவீந்திரா ஆட்டநாயகன் விருதை வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.