எம்எல்சி 2023: டி காக், பார்னெல் அபாரம்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது சியாட்டில்!
மேஜர் லீக் கிரிக்கெட் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி சியாட்டில் ஓர்காஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வெனற டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணியால் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் நட்சத்திர வீரர்கள் டெவான் கான்வே ரன்கள் ஏதுமின்றியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் 13 ரன்களிலும், மில்லர் ஒரு ரன்னிலும், சாண்ட்னர் 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் களமிறங்கிய டுவைன் பிராவோ - டேனியல் சாம் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் பிராவோ 39 ரன்களையும், டேனியல் சாம்ஸ் 26 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெக்ஸாஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சியாட்டில் அணி தரப்பில் கேப்டன் வெய்ன் பார்னெல் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சியாட்டில் அணியில் தொடக்க வீரர் நௌமன் அன்வர் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த குயின்டன் டி காக் - ஹென்ரிச் கிளாசென் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக் அரைசதம் கடந்தார்.
அதன்பின் 53 ரன்களில் டி காக் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த ஹென்ரிச் கிளாசென் 42 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் சியாட்டில் அணி 16 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.