அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளன. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு ஜேசன் ராய் - சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுனில் நரைன் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த உன்முக்த் சந்த் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். 

Advertisement

அவர்களைத்தொடர்ந்து 26 ரன்களில் ஜேசன் ராயும், 35 ரன்களில் ஷாகிப் அல் ஹசன் 35 ரன்களிலும், நிதீஷ் குமார் 20 ரன்களிலும், டேவிட் மில்லர் 24 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதன்பின் இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ரஸல் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 40 ரன்கள் எடுத்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது. யூனிகார்ன்ஸ் அணி தரப்பில் பிராடி கௌச் மற்றும் ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

Advertisement

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியில் தொடக்க வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த ஃபின் ஆலன் மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 116 ரன்களைச் சேர்த்தனர். பின்னர் 3 பவுண்டரி, 5 சிக்ஸர் என 58 ரன்களில் மேத்யூ ஷார்ட்டும், 4 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 63 ரன்களில் ஃபின் ஆலனும் விக்கெட்டை இழந்தனர். 

அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் 15 ரன்களில் நடையைக் கட்டினார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கோரி ஆண்டர்சன் 11 ரன்களையும், ஹசன் கான் 2 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 15.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஃபின் ஆலன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News