அமெரிக்காவில் நடைபெற்றுவரும் இரண்டாவது சீசன் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் சியாட்டில் ஆர்காஸ் - சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மோரிஸ்வில்லேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சியாட்டில் ஆர்காஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.  அதன்படி களமிறங்கிய யூனிகார்ன்ஸ் அணிக்கு ஃபின் ஆலன் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர்.

Advertisement

இதில் ஃபிரேசர் மெக்குர்க் 11 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஆலனுடன் இணைந்த மேத்யூ ஷார்ட் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபின் ஆலன் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த மேத்யூ ஷார்ட் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 56 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ், கேப்டன் கோரி ஆண்டர்சன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய ஹசன் கான் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், இறுதிவரை களத்தில் இருந்த சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 30 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது. சியாட்டில் ஆர்காஸ் அணி தரப்பில் கேமரூன் கேனன் 3 விக்கெட்டுகளையும், இமாத் வசீம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ரியான் ரிக்கெல்டன் - ஷெஹான் ஜெயசூர்யா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதில் ரியான் ரிக்கெல்டன் 29 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் குயின்டன் டி காக்கும் 2 ரன்களுடன் நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார். அதன்பின் அபாரமாக விளையாடிய ஜெயசூர்யா அரைசதம் கடந்த நிலையில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 54 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹென்ரிச் கிளாசென், ஆரோன் ஜோன்ஸ், ஹர்மீத் சிங் உள்ளிட்ட வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக்கட்ட சியாட்டில் ஆர்காஸின் தோல்வியும் உறுதியானது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹம்மத் அசாம் 16 ரன்களையும், கேமரூன் கேனன் 6 ரன்களை சேர்த்த நிலையிலும், 20 ஓவர்கள் முடிவில் சியாட்டில் ஆர்காஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை மட்டுமே சேர்த்தது. யூனிகார்ன்ஸ் அணி தரப்பில் லியாம் பிளங்கிட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் சான் பிரான்சிஸ்கோ யூனிகர்ன்ஸ் அணியானது 23 ரன்கள் வித்தியாசத்தில் சியாட்டில் ஆர்காஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லியாம் பிளங்கிட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News