நியூசிலாந்து டி20 தொடரிலிருந்து விலகிய முகமது ரிஸ்வான், இர்ஃபான் கான்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி மழையால் தடைபட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும், மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் முகமது ரிஸ்வான் மற்றும் முகமது இர்ஃபான் கான் ஆகியோர் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் உறுதிசெய்துள்ளது. இதுகுறித்து பிசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிசிபி மருத்துவக் குழு நேற்று முகமது ரிஸ்வான் மற்றும் முகமது இர்பான் கானின் ஸ்கேன் அறிக்கைகளைப் பெற்றது. அந்த அறிக்கைகளை மதிப்பாய்வு செய்து, பாகிஸ்தான் அணி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்த பின்னர், நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சியுள்ள டி20 போட்டிகளில் இரு வீரர்களுக்கும் ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு வீரர்களும் தங்கள் மறுவாழ்வுக்காக கராசியில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று, அங்குள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மருத்துவ குழுவுடன் இணைந்து பணியாற்றுவார்கள்” என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த அறிக்கையில் முகமது ரிஸ்வான் மற்றும் முகமது இர்ஃபான் கான் இருவரது காயம் குறித்த எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
ஏற்கெனவே பாகிஸ்தான் அணி கடந்த போட்டியில் தோல்வியடைந்துள்ள நிலையில், தற்போது முகமது ரிஸ்வான், முகமது இர்ஃபான் கான் ஆகியோரும் காயம் காரணமாக விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில போட்டிகளில் இடம்பெறாமல் இருந்த ஃபகர் ஸமான் மற்றும் ஷதாப் கான் ஆகியோருக்கு இப்போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.