IND vs ENG: கம்பேக் கொடுக்கும் ஷமி; கடும் போட்டியில் சஞ்சு - ரிஷப்!

Updated: Thu, Jan 09 2025 08:56 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணி, வரவிருக்கும் இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நோக்கி தனது கவனத்தை செலுத்தி வருகிறது. அதிலும் இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் சம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த காத்திருந்த முகமது ஷமி இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்னதாக காயத்தினால் கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்து வந்த ஷமி தற்சமயம் காயத்தில் இருந்து குணமடைந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

இதனால் தற்சமயம் உடற்தகுதியுடன் இருக்கும் முகமது ஷமி மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்கவுள்ளது, இந்திய பந்துவீச்சு யூனிட்டிற்கு கூடுதல் பலத்தை வழங்கும். அதேசமயம் நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் போது காயத்தை சந்தித்த ஜஸ்பிரித் பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் இத்தொடரில் அவர் பங்கேற்பாரா என்பது தற்போது வரை நிச்சயமற்றதாகவே உள்ளது.

இதுதவிர்த்து இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் முதல் தேர்வாக இருப்பதாகவும், கூடுதல் விக்கெட் கீப்பருக்கான தேர்வில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் சமீபத்தில் சஞ்சு சாம்சன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன், கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியிலும் சதமடித்து அசத்தியுள்ளதால் அவர் அணியில் இடம்பெற அதிகவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மான் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு ரிசர்வ் தொடக்க வீரராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர்த்து ஹர்திக் பாண்டியா அணியில் இடம்பிடிப்பது உறுதியாகிவுள்ள நிலையில், அக்ஸர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது தேர்வின் குழப்பங்கள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு ஜனவரி 11ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை இறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனுகான தேர்வில் விராட் கோலி முன்னிலையில் இருப்பார் என்ற தகவல் வெளியாகினாலும், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை