டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகினார் முகமது ஷமி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இத்தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பை பெறுவார்கள் என்பதால், இத்தொடர் மீது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி, அதன்பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட தொடர்களை தவறவிட்ட ஷமி, சமீபத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் விலகினார்.
இருப்பினும் அவர் ஐபிஎல் தொடருக்கு முன் முழு உடற்தகுதியை எட்டி கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் தான் தனது இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முகமது ஷமி இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்தாண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து கணுக்கால் காயம் காரணமாக இந்திய வீரர் முகமது சமி விலகியுள்ளதாக பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் முகமது ஷமி இந்திய அணியில் இணைவார்” என தெரிவித்தார். இதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து முகமது ஷமி விலகியது உறுதியாகியுள்ளது. வரும் ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அதேபோல், ஜூன் 9 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் நடைபெற உள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து முகமது சமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முகமது ஷமி 7 போட்டிகளில் மட்டுமே விளையாடி 24 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தி அசத்தினார். தற்போது அவர் டி0 உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்ற செய்தி இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.