இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் சம ஸ்கோரை எடுத்ததன் காரணமாக அப்போட்டி டையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்ய முடியாமல் தொடரை சமனிலையில் வைத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழுபுவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதேசமயம் இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் கமிந்து மெண்டிஸ் மற்றும் ஜெஃப்ரி வண்டர்சே ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்திய அணி தரப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை முகமது சிராஜ் வீசினார். அதன்படி சிராஜ் வீசிய இன்னிங்ஸின் முதல் பந்தை எதிர்கொண்ட பதும் நிஷங்கா அதனை தடுத்து விளையாட முயற்சித்தார். ஆனால் பந்து அவர் எதிர்பார்த்ததை விட அதிகளவு ஸ்விங் ஆனதால் அது அவரது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் கைகளில் தஞ்சமடைந்தது.
இதனால் இப்போட்டியில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பதும் நிஷங்கா விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் ஃபெர்னாண்டோவுடன் இணைந்த குசால் மெண்டிஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 40 ரன்கள் எடுத்த நிலையில் அவிஷ்கா ஃபெர்னாண்டோவும், 30 ரன்கள் எடுத்த நிலையில் குசால் மெண்டிஸும் என அடுத்தடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இதனால் இலங்கை அணி 79 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் முகமது சிராஜ் முதல் பந்திலேயே பதும் நிஷங்காவின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.