என்னை பொறுத்தவரை அன்றைய நாளிலேயே ஓய்வுபெற்றுவிட்டேன் - எம்எஸ் தோனி!
கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் தோல்வியடைந்த பின் இந்திய அணியின் தோனி, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் உள்ளிட்டோர் சிறு குழந்தைகள் போல் ஓய்வறையில் கண் கலங்கியதாக முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியிருந்தார். பெரும்பாலும் உணர்வுகளை வெளிப்படுத்தாத தோனி அழுதார் என்று கூறியது அவரது ரசிகர்களை கலங்க வைத்தது.
இந்த நிலையில் பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனியிடம் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி தோல்வி குறித்தும், சஞ்சய் பங்கர் பகிர்ந்த விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி, “மிகமுக்கியமான போட்டியில் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியடையும் போது உணர்வுகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்று.
ஒவ்வொரு போட்டிக்கும் எனக்கான திட்டங்களை தயாராக வைத்தே களமிறங்குவேன். அதேபோல் அன்றைய ஆட்டம் இந்திய அணிக்காக எனக்கு கடைசி போட்டியாக அமைந்தது. என்னை பொறுத்தவரை அன்றைய நாளிலேயே ஓய்வுபெற்றுவிட்டேன். அறிவிப்பு வேண்டுமானால் ஒரு ஆண்டுக்கு பின் வந்திருக்கலாம். ஆனால் அன்றைய தினமே ஓய்வுபெற்றுவிட்டேன் என்றே சொல்ல வேண்டும்.
பயிற்சியாளர்களிடம் இருந்து பேட்ஸ்மேன்கள் பயிற்சிக்காக சில தொழில்நுட்ப சாதனங்கள் வழங்கப்படும். நான் ஒவ்வொரு முறை பயிற்சியாளரை பார்க்கும் போது, அந்த தொழில்நுட்ப சாதனங்களை திருப்பி கொடுக்க முயற்சித்தேன். ஆனால் அதனை பயிற்சியாளர் பெற மறுத்தார். அவரிடம் இதற்கு மேல் இது எனக்கு தேவையில்லை என்று எப்படி அவரிடம் கூற வேண்டும் என்று தெரியவில்லை. அதனால் உடனடியாக நான் ஓய்வை அறிவிக்கவில்லை.
கடந்த 12 முதல் 15 ஆண்டுகளில் இந்திய அணிக்காக விளையாடுவதை மட்டுமே செய்துள்ளேன். திடீரென இனி நாட்டுக்காக களமிறங்க மாட்டோம் என்ற நிலை விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே வரும் சூழல். நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தால், மீண்டும் இந்தியாவுக்காக களமிறங்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காது. மீண்டும் அந்த வெற்றியை பெற முடியாது என்று தெரிய வரும் போது, மனதில் ஏற்படும் உணர்வுகளுக்கு அளவேயில்லை” என்று தெரிவித்துள்ளார்.