17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்கம் கொடுத்தனர்.

Advertisement

இதில் இன்னிங்ஸின் ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரியும், சிக்சர்களையும் விளாச முதல் 6 ஓவர்களில் மும்பை அணி 75 ரன்களைக் குவித்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மா தனது அரை சதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 49 ரன்கள் சேர்த்த நிலையில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.

Advertisement

அவரைத்தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் இரண்டு பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவர்களைத் தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிக் கொண்டிருந்த இஷான் கிஷான் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 42 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய திலக் வர்மாவும் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா - டிம் டேவிட் இணை முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பின் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹர்திக் பாண்டியா 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 39 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிம் டேவிட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 45 ரன்களைக் குவிக்க, அவருக்கு துணையாக விளையாடிய ரொமாரியோ செஃபெர்ட் 10 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 39 ரன்களை குவித்தார்.  இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 234 ரன்களை குவித்தது.

இதையடுத்து 235 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் - பிரித்வி ஷா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டேவிட் வார்னர் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் பிரித்வி ஷாவுடன் இணைந்த அபிஷேக் போரல் பொறுப்பாஅ ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அதேசமயம் மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 88 ரன்கள் சேர்த்த நிலையில் 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 66 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். இதையடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் களமிறங்கியது முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருந்த அபிஷேக் போரெல் 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

Advertisement

இருப்பினும் தனது அதிரடியைக் கைவிடாத டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 71 ரன்காளைச் சேர்த்த நிலையிலும் டெல்லி அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News