வினோதமான முனையில் விக்கெட்டை இழந்த முஷ்ஃபிக்கூர் ரஹீம்; வைரலாகும் காணொளி!

Updated: Tue, Sep 26 2023 21:27 IST
வினோதமான முனையில் விக்கெட்டை இழந்த முஷ்ஃபிக்கூர் ரஹீம்; வைரலாகும் காணொளி! (Image Source: Google)

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. விரைவில் இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்துடன் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2ஆவது போட்டியில் நியூசிலாந்து எளிதான வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

அந்த சூழ்நிலையில் தொடரின் முக்கியமான வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி செப்டம்பர் 26ஆம் தேதி தலைநகர் தாக்காவில் நடைபெற்றது. அதில் ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்க்க வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் ஆரம்பத்திலேயே அந்த அணிக்கு தன்சிட் ஹசன் 5, ஜாகிர் ஹசன் 1 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து வந்த ஹ்ரிடாய் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 35/3 என்ற சுமாரான துவக்கத்தை பெற்ற வங்கதேசத்திற்கு நட்சத்திர அனுபவ வீரர் முஸ்பிகர் ரஹீம் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சரிவை சரி செய்ய போராடினார். அந்த வகையில் 18 ரன்கள் எடுத்து நிதானத்தை காட்டிய அவர் லாக்கி ஃபெர்குசன் வீசிய 16ஆவது ஓவரின் முதல் பந்தை பொறுமையாக எதிர்கொண்டார்.

ஆனால் அவரது பேட்டில் பட்ட பந்து அப்படியே தரையில் பட்டு பின்னோக்கி சென்றது. அந்த சமயத்தில் பெரும்பாலான வீரர்களை போலவே தம்முடைய காலை பயன்படுத்திய அவர் கிட்டத்தட்ட பந்தை எட்டி உதைத்து எப்படியாவது தடுக்க வேண்டும் என்று முயற்சித்தார். இருப்பினும் அதையும் தாண்டி அவருடைய காலில் லேசாக மட்டுமே பட்ட பந்து வேகமாக ஸ்டம்பில் அடித்து அவரை போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தது.

பொதுவாகவே கிரிக்கெட்டில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் வலைப்பயிற்சிகள் செய்யும் போது கால்பந்தை பயன்படுத்தி பயிற்சிகளை எடுப்பது வழக்கமாகும். அதை வைத்து களத்தில் இது போன்ற சமயங்களில் காலை பயன்படுத்தி சில பேட்ஸ்மேன்கள் பந்தை வெற்றிகரமாக தடுத்துள்ளார்கள். அந்த வரிசையில் தம்முடைய கேரியரில் கற்ற மொத்த கால்பந்து பயிற்சிகளை எறக்கியும் அந்த சமயத்தில் ரஹீமுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

 

அவரை தொடர்ந்து மிடில் ஆர்டரில் கேப்டன் நஜ்முல் சாண்டோ கடுமையாக போராடி 76 ரன்கள் எடுத்த போதிலும் இதர வீரர்கள் கை கொடுத்த தவறியதால் 34.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்த வங்கதேசம் 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. மறுபுறம் பந்து வீச்சில் அசத்திய நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஆடம் மில்னே 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி வில் யங், ஹென்றி நிக்கோலஸ் ஆகியோரது சதம் காரணமாக 34.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது.   

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை