பாபர் ஆசாம் ஃபார்முக்கு திரும்ப விராட் கோலியை பின்பற்ற வேண்டும் - முஷ்டாக் அஹ்மத்!

Updated: Tue, Jan 02 2024 18:45 IST
பாபர் ஆசாம் ஃபார்முக்கு திரும்ப விராட் கோலியை பின்பற்ற வேண்டும் - முஷ்டாக் அஹ்மத்! (Image Source: Google)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சமீப காலங்களில் ரன்கள் குவிக்க முடியாமல் திணறி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான புதிதில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் தற்போது விரைவில் ஆட்டமிழந்து பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்து வருகிறார். 

மேலும் கடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாபர் ஆசாம் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்ற பாபர் ஆசாம் அனைத்து விதமான கேப்டன்ஷிப் பதவிகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்து தற்போது சாதாரண வீரராக விளையாடி வருகிறார்.

இருப்பினும் அவரால் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. இந்நிலையில் பாபர் ஆசாம் ஃபார்முக்கு திரும்ப கடந்த காலங்களில் சதமடிக்காமல் தடுமாறியபோது சிறிது ஓய்வெடுத்து கம்பேக் கொடுத்த இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியை பின்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முஷ்டாக் அஹ்மது ஆலோசனை கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "பாபர் ஆசாம் ஃபார்முக்கு திரும்ப விராட் கோலியை பின்பற்ற வேண்டும். ஒரு வீரர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்று உணரும்போது அவர் 2 - 3 போட்டிகளில் இருந்து ஓய்வு எடுக்கலாம். அதேபோல விராட் கோலி ஃபார்மின்றி தடுமாறியபோது ஓய்வெடுத்தார். அதன் பின் விளையாட திரும்பிய அவர் தற்போது எவ்விதமான தடுமாற்றத்தையும் சந்திக்கவில்லை. அவரைப்போலவே பார்முக்கு திரும்பி அசத்துவதற்காக பாபர் ஆசாமும் தற்காலிகமாக ஓய்வு எடுக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் அணி நிர்வாகம் உரிமை எடுத்து பாபர் ஆசாமிடம் ஓய்வெடுக்குமாறு அறிவுரை கூற வேண்டும். ஏனெனில் கடந்த காலங்களில் அபாரமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் நம்முடைய ஹீரோ. உலக அரங்கில் அவர் டாப் வீரராகவும் கருதப்படுகிறார். இருப்பினும் கடந்த ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் தடுமாறிய அவர் தற்போது கேப்டன்ஷிப் பதவியை இழந்துள்ளார்" என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை