NAM vs ZIM, 4th T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை சமன்செய்த நமீபியா!

Updated: Sun, Oct 29 2023 19:40 IST
NAM vs ZIM, 4th T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை சமன்செய்த நமீபியா! (Image Source: Google)

நமிபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த 3 போட்டிகளில் நமிபியா அணி ஒரு போட்டியிலும், ஜிம்பாப்வே அணி 2 போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு இன்னசெண்ட் கையா - கமுன்ஹுகம்வே இணை களமிறங்கினர். இதில் 15 ரன்களை எடுத்திருந்த இன்னசெண்ட் கையா ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் கிரேக் எர்வின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான கமுன்ஹுகம்வே 32 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய சிக்கந்தர் ரஸா, ரியான் பர்ல், மும்பா, மதவெரே ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த கேப்டன் கிரேக் எர்வின் அரைசதம் கடந்து 54 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களைச் சேர்த்தது. நமிபியா அணி தரப்பில் ஹாண்ட்ரே கிளாசிங்கா, ஹெகார்ட் எராஸ்மஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நமிபியா அணிக்கு மைக்கேல் வான் - நிகோலஸ் தவின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மைக்கேல் வான் 47 ரன்களுக்கும், நிகோலஸ் தவின் 34 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ரியான் பர்ல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ஜான் ஃபிரைலிங்க் - ஹெகார்ட் எராஸ்மஸ் இணையும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் ஃபிரைலிங்க் 29 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எராஸ்மஸ் 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் நமிபியா அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. வெற்றிக்கு காரணமாக இருந்த நமிபியா அணி கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை