சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டேவிட் வைஸ்!

Updated: Sun, Jun 16 2024 10:08 IST
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டேவிட் வைஸ்! (Image Source: Google)

இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது இன்று ஆண்டிகுவாவில் நடைபெற்றது. மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 10 ஓவர்களாக குறைக்கப்பட்ட இப்போட்டியில் டாஸை வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களைச் சேர்த்தது. 

இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 31 ரன்களையும் சேர்த்தனர். நமீபியா அணி தரப்பில் ரூபன் டிரெம்பெல்மேன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நமீபியா அணிக்கு மைக்கேல் வான் லிங்கேன் - நிக்கோலஸ் டேவின் இணை அதிரடியான தொடக்கத்தக் கொடுத்தனர்.

அதன்பின் நிக்கோலஸ் டேவின் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லோகன் வான் லிங்கேன் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்களை விளாசி 33 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் டேவிட் வைஸும் 2 பவுண்டரி, 2 சிக்ஸ்ர்கள் என 27 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, நமீபியா அணியின் தோல்வியும் உறுதியானது. 

இறுதியில் 10 ஓவர்கள் முடிவில் நமீபியா அணியானது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்களை மட்டுமே சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணியானது 41 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த ஹாரி புரூக் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில், இப்போட்டியில் அதிரடியாக விளையாடி நமீபியா அணியின் வெற்றிக்காக போராடிய டேவிட் வைஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்படி இப்போட்டியில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பிய டேவிட் வைஸிற்கு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

தற்போது 39 வயதை எட்டியுள்ள டேவிட் வைஸ், கடந்த 2013ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானலும், அங்கு தனக்கு போதிய வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் கடந்த 2021ஆம் ஆண்டு நமீபியா அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்துள்ளார். அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 15 ஒருநாள், 54 டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்காக விளையாடியுள்ளார். 

இதில் ஒரு நாள் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 330 ரன்களையும், பந்துவீச்சில் 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். அதேசமயம் டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் 3 அரைசதங்களுடன் 624 ரன்களையும், பந்துவீச்சில் 59 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை