AUSA vs INDA: மெக்ஸ்வீனி, வெப்ஸ்டர் அதிரடியில் இந்தியா ஏ அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஏ!

Updated: Sun, Nov 03 2024 08:38 IST
Image Source: Google

இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில் இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் பயிற்சி போட்டியானது மெக்காயில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய ஏ அணி பேட்டர்கள் முதல் இன்னிங்ஸில் பெரிதளவில் சோபிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.  இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய ஏ அணி 107 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 36 ரன்களைச் சேர்த்தர். ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் பிரெண்டன் டோகெட் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையாடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணியிலும் சீரான இடைவேளையில் விக்கெட்டுக்கெடுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் மெக்ஸ்வீனி 39 ரன்களையும், கூப்பர் கனொலி 37 ரன்களையும் சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 195 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.  இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகேஷ் குமார் 6 விக்கெட்டுகளையும், பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன்பின் 88 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய ஏ அணியில் அபிமன்யூ ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன் - தேவ்தத் படிக்கல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கள் அரைசதங்களை கடந்து அசத்தினர். இதில் படிக்கல் 88 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட, மறுமுனையில் அபாரமாக விளையாடிய சாய் சுதர்ஷன் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் அவரும் 103 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.

இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 312 ரன்களை எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 312 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய ஏ அணியில் சாம் கொண்டாஸ் மற்றும் கேமரூன் பான்கிராஃப் ஆகியோர் தலா 16 ரன்களில் நடையைக் கட்ட, மற்றொரு தொடக்க வீரரான மார்கஸ் ஹாரிஸும் 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இதனால், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய ஏ அணி 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை சேர்த்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை மெக்ஸ்வீனி 47 ரன்களுடனும், வெப்ஸ்டர் 19 ரன்களுடனும் தொடர்ந்தனர். இருவரும் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். 

Also Read: Funding To Save Test Cricket

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெக்ஸ்வீனி 88 ரன்களையும், வெப்ஸ்டர் 61 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலியா ஏ அணி 7விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டியானது நவம்பர் 7ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை