நவீன் உல் ஹக் விளையாட 20 மாதங்கள் தடை; காரணம் என்ன?

Updated: Mon, Dec 18 2023 20:24 IST
நவீன் உல் ஹக் விளையாட 20 மாதங்கள் தடை; காரணம் என்ன? (Image Source: Google)

ஆஃப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக். கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலி கொடுத்த பதிலடியை பொறுத்த முடியாமல், லக்னோ அணிக்காக ஆடிய நவீன் உல் ஹக் உடனடியாக அவருடன் மோதலில் ஈடுபட்டார். அதேபோல் விராட் கோலியின் விக்கெட்டை ஸ்வீட் மேங்கோஸ் என்று பதிவிட்டு கொண்டாடினார்.

இதனால் ஆர்சிபி ரசிகர்கள் நவீன் உல் ஹக் எங்கு சென்றாலும் விராட் கோலியின் பெயரை கூறி அவரை வம்புக்கு இழுத்தனர். இது உலகக்கோப்பை தொடரிலும் தொடர்ந்தது. இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, விராட் கோலிக்கு நவீன் உல் ஹக் பந்துவீசிய போது, ரசிகர்கள் அவரை வம்புக்கு இழுத்தனர்.

இதனை அமைதியாக பார்த்து கொண்டிருந்த விராட் கோலி, நவீன் உல் ஹக்கிற்கு ஆதரவளிக்குமாறு ரசிகர்களிடாம் கூறினார். அதேபோல் நவீன் உல் ஹக்கை நேரடியாக அழைத்து நட்பு பாராட்டினார். இதன்பின் இருவருக்கும் இடையிலான மோதல் சுமூக உறவாக மாறியது. தொடர்ந்து நவீன் உல் ஹக்கிற்கு இந்திய ரசிகர்கள் ஆதரவளித்தனர்.

நவீன் உல் ஹக் ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான டி20 மற்றும் டி10 லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். அந்த வகையில் இண்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். முதல் சீசனில் ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய நவீன் உல் ஹக் ஒப்பந்தத்தை நீட்டிக்க அந்த அணி நிர்வாகம் ஒப்பந்தங்களில் கையெழுத்திட அனுப்பியுள்ளது.

ஆனால் அந்த ஒப்பந்தங்களில் நவீன் உல் ஹக் கையெழுத்திடாமல் தாமதம் செய்து வந்துள்ளார். இதுகுறித்து ஷார்ஜா வாரியர்ஸ் அணி விசாரிக்கையில், நவீன் உல் ஹக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது தெரிய வந்துள்ளது. இதன்பின் விவகாரத்தை ஷார்ஜா வாரியர்ஸ் அணி நிர்வாகம் ஐஎல்டி20 தலைமையிடம் கொண்டு சென்றுள்ளது. இதன்பின் மூன்றாவது நபர் தலையிட்டு விவகாரத்தை முடிக்க ஐஎல்டி20 தலைமை அறிவுறுத்தியுள்ளது. 

ஆனாலும் இரு தரப்புக்கும் இடையிலான பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. இதனால் ஷார்ஜா நிர்வாகம் மற்றும் நவீன் உல் ஹக் இருவரையும் தனித்தனியே ஐஎல்டி20 லீக் நிர்வாகம் விசாரனை நடத்தியுள்ளது. அந்த விசாரணையின் முடிவில் ஐஎல்டி20 லீக்கில் நவீன் உல் ஹக் விளையாட 20 மாதங்கள் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. நவீன் உல் ஹக் செல்லும் இடமெல்லாம் சர்ச்சையில் சிக்கி வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை