கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்!

Updated: Sun, Sep 01 2024 12:17 IST
Image Source: Google

கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணியானது பூரன் மற்றும் கேசி கார்டி ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 250 ரன்களைக் குவித்தது. 

இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 97 ரன்களையும், கேசி கார்டி 73 ரன்களையும் சேர்த்தனர். பேட்ரியாட்ஸ் அணி தரப்பில் ஆன்ரிச் நோர்ட்ஜே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பேட்ரியாட்ஸ் அணியில் மைக்கேல் லூயிஸ் 56 ரன்களையும், எவின் லூயிஸ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் தலா 39 ரன்களையும் சேர்த்தனர். 

ஆனால் அவர்களைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காத காரணத்தால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 44 ரன்கள் வித்தியாசத்தில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் 9 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டிய நிக்கோலஸ் பூரன் டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைத்து அசத்தியுள்ளார். அதன்படி, ஒரு ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் எனும் சாதனையை நிக்கோலஸ் பூரன் படைத்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயில் கடந்த 2015ஆம் ஆண்டு 135 சிக்ஸர்களை அடித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. 

அதனைத் தற்போது நிக்கோலஸ் பூரன் முறியடித்ததுடன் நடப்பாண்டில் 139 சிக்ஸர்களை விளாசி இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மேற்கொண்டு இந்த பட்டியலின் அடுத்த நான்கு இடங்களையும் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு பூரன் இந்த சீசன் முழுவதும் இதேபோல் அதிரடியாக விளையாடினால் புதிய வரலாறு படைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

ஒரு ஆண்டில் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள்

  • 139* - நிக்கோலஸ் பூரன் - 2024
  • 135 - கிறிஸ் கெய்ல் - 2015
  • 121 - கிறிஸ் கெய்ல் - 2012
  • 116 - கிறிஸ் கெய்ல் - 2011
  • 112 - கிறிஸ் கெய்ல் -2016
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை