T20 WC 2024: கிறிஸ் கெயிலின் சிக்ஸர் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 40ஆவது மற்றும் கடைசி லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் பிரெண்டன் கிங் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த ஜான்சன் சார்லஸ் - நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
இதில் ஜான்சன் சார்லஸ் 43 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த நிக்கோலஸ் பூரன் 53 பந்துகளில் 6 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 98 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவருக்கு துணையாக விளையாடிய ஷாய் ஹோப் மற்றும் கேப்டன் பொவெல் முறையே 25 மற்றும் 26 ரன்களை அடித்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்களை குவித்தது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் குலாப்தின் நயிப் விக்கெட்டுகளையும், ஒமர்சாய் மற்றும் நவீன் உல் ஹக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அதன்பின் கடின இலக்கை துரத்திய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய இப்ராகிம் 38 ரன்களை சேர்த்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார பந்துவீச்சு காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் 8 சிக்ஸர்களை விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் எனும் கிறிஸ் கெயிலின் சாதனையை நிக்கோலஸ் பூரன் முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக கிறிஸ் கெயில்ஸ் 124 சிக்ஸர்களை விளாசி முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது நிக்கோலஸ் பூரன் 128 சிக்ஸர்களை விளாசி அதிக சிக்ஸர்களை அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்
- 128 - நிக்கோலஸ் பூரன்
- 124 - கிறிஸ் கெயில்
- 111 - எவின் லூயிஸ்
- 99 - கீரன் பொல்லார்ட்
- 90 - ரோவ்மேன் பவல்
அதுமட்டுமின்றி டி20 கிரிக்கெட் போட்டிகளில் 500க்கு மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் நிக்கோலஸ் பூரன் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் 1056 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், கீரென் பொல்லார்ட் 860 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்திலும், 686 சிக்ஸர்களுடன் ஆண்ட்ரே ரஸல் மூன்றாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் ஒரு இன்னிங்ஸின் அதிக சிக்ஸர்களை அடித்த 5ஆவது வீரர் எனும் பெருமையையும் நிக்கோலஸ் பூரான் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்
- 1056 - கிறிஸ் கெயில்
- 860 - கீரன் பொல்லார்ட்
- 686 - ஆண்ட்ரே ரஸல்
- 548 - காலின் முன்ரோ
- 514 - ரோஹித் சர்மா
- 502 - நிக்கோலஸ் பூரன்
டி20 உலகக்கோப்பை தொடரின் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள்
- 11 - கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) vs இங்கிலாந்துக்கு எதிராக, மும்பை, 2016
- 10 - கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) vs தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, ஜோஹன்னஸ்பர்க், 2007
- 10 - ஆரோன் ஜோன்ஸ் (அமெரிக்கா) vs கனடாவுக்கு எதிராக, டல்லாஸ், 2024
- 8 - ரைலீ ரூஸோவ் (தென் ஆப்பிரிக்கா), vs வங்கதேசத்திற்கு எதிராக, சிட்னி, 2022
- 8 - நிக்கோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்) vs ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக, செயின்ட் லூசியா, 2024