இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. 

Advertisement

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 325 ரன்களிலும், அதனைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 263 ரன்களுக்கும் ஆல் அவுட்டானது. அதன்பின் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக 156 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டாகி, 219 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷங்கா சதமடித்து அசத்தினார். மேலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 127 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இலங்கை அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. ஆனாலும் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. 

இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய பதும் நிஷங்கா சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அந்தவகையில் சேஸிங் போது எதிர்கொண்ட பந்துகளை காட்டிலும் அதிக ரன்களை அடித்த வீரர்கள் வரிசையில் பதும் நிஷங்கா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோவ் 92 பந்துகளில் 132 ரன்களைச் சேர்த்து முதலிடத்தில் உள்ள நிலையில், நிஷங்கா 124 பந்துகளில் 127 ரன்களை எடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார். 

மேலும் இலங்கை அணிக்காக 4ஆவது இன்னிங்ஸ் சதமடித்து ஆட்டத்தை வென்று தந்த வீரர்கள் வரிசையில் பதும் நிஷங்காவிற்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு குசால் பெரேரா 153 ரன்களையும், 1998ஆம் ஆண்டும் அரவிந்தா டா சில்வா 143 ரன்களையும் சேர்த்து இந்த பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளனர். இதில் பதும் நிஷங்கா 127 ரன்களுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ரன் சேஸிங்போது சதமடித்த வீரர்களின் வரிசையிலும் பதும் நிஷங்காவிற்கு 5ஆம் இடம் கிடைத்துள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் கார்டன் க்ரீனிட், ஆஸ்திரேலியாவின் ஆர்தர் மோரிஸ், டான் பிராட்மேன், தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் ஆகியோர் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ள நிலையில், பதும் நிஷங்காவிற்கு 5ஆம் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News