ENG vs IND: டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் நிதிஷ் ரெட்டி; இந்திய அணிக்கு பின்னடைவு!
ENG vs IND, 4th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன் இந்திய அணி ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி காயத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மான்செஸ்டரில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஜூலை 23ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இத்தொடரில் இந்திய அணி ஏற்கெனவெ 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும் என்ற கட்டாயத்துடன் எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் இந்திய அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வீரர் நிதிஷ் ரெட்டி காயத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின் படி நிதிஷ் ரெட்டி உடற்பயிற்சி மேற்கொண்ட நிலையில் காயத்தை சந்தித்துள்ளதாகவும், இதனால் அவர் இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
ஏனெனில் நிதிஷ் ரெட்டி கடந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அணிக்கு தேவையான உதவியை வழங்கினார். இருப்பினும் அவரிடம் எதிர்பார்த்த அளவிலான செயல்திறன் இல்லை என்றாலும் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை வலுப்படுத்தும் நோக்கில் அவர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் தொடரிலிருந்து விலகும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்சமயம் நிதிஷ் ரெட்டியின் காயம் அணிக்கு மேலும் பின்னடைவை உருவாக்கியுள்ளது. இதில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக ஹரியானாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதன்மூலம் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறவும் அதிக வாய்ப்புள்ளது.
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக்கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.
Also Read: LIVE Cricket Score