தொடர் தோல்வி எதிரொலி; வீரர்களுக்கு கடும் கட்டுப்பாட்டை விதித்த பிசிசிஐ!

Updated: Fri, Jan 17 2025 11:34 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது கடுமையான நிலைப்பாட்டைக் காட்டியுள்ளது மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, குடும்பப் பயணம், வீரர்களின் உடமை வரம்பு மற்றும் தனிப்பட்ட விளம்பரப் படப்பிடிப்புகள் தொடர்பான கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜனவரி மாதம் தொடர் முடிந்த பிறகு பிசிசிஐ நடத்திய மறுஆய்வுக் கூட்டத்தின் போது, ​​டிரஸ்ஸிங் ரூமுக்குள் நல்லிணக்கம் மற்றும் ஒழுக்கம் இல்லாதது குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கிட்டத்தட்ட இரண்டு மாத கால ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, ​​முழு அணியும் ஒரே ஒரு அணி விருந்துக்கு மட்டுமே கூடியது என்பதும் தெரியவந்தது.

பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகும் இந்திய வீரர்கள் ஒன்றாக சுற்றித் திரியவில்லை என்று ஆஸ்திரேலிய ஊடக அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தது. இதன் காரணமாகவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு புதிய கொள்கையை வெளியிட வேண்டியிருந்தது. இந்தக் கொள்கையின் கீழ் வீரர்கள் என்னென்ன விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதை இப்பதிவில் பார்ப்போம். 

பிசிசிஐ-யின் புதிய நெறிமுறைகள்

வீரர்கள் மைதானத்திற்கு செல்லும் போதும், பயிற்சியின் போதும் அணியினருடன்தான் பயணிக்க வேண்டும். குடும்பத்துடனோ அல்லது தனியாகவோ செல்லக்கூடாது. வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது இந்திய வீரர்கள் தங்கள் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரை அழைத்து செல்வதால் விளையாட்டில் கவனம் சிதறுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகிறது. இதிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகிறது.

45 நாட்களுக்கு மேல் வெளிநாட்டு தொடர் என்றால் வீரர்களுடன் 2 வாரம் மட்டும் குடும்பத்தினர் தங்கியிருக்க அனுமதிக் கப்படுவார்கள். மேலும் தனிப்பட்ட மேலாளர்கள், சமையல் கலைஞர்கள், உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு உள்ளடங்கிய தனிப்பட்ட பணியாளர்களை அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பயிற்சியை முடித்து விட்டு சீக்கிரம் கிளம்ப கூடாது, அணியினருடன்தான் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

விதிமுறைகளில் தளர்வுகள் வேண்டுமெனில் தலைமை பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம் அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு சுற்றுப்பயணத்தின் போதும் வீரர்கள் அணியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொருட்களின் குறிப்பிட்ட வரம்பைக் கடைப்பிடிக்க வேண்டும். கூடுதல் உடமைகளுக்கான எந்தவொரு செலவையும் தனிப்பட்ட வீரரே ஏற்க வேண்டும். 

Also Read: Funding To Save Test Cricket

அதேசமயம் தேசிய அணிக்கு தகுதியான மற்றும் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் அனைவரும் கட்டாயம் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். அத்தியாவசியமான ஒருசில காரணங்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை பின்பற்ற தவறும் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தண்டனையின் ஒரு பகுதியாக ஐபிஎல்தொடரில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை