இந்தியாவில் ரோஹித் சர்மாவுக்கு பந்துவீசுவது மிகவும் கடினமாக இருக்கும் - மாண்டி பனேசர்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வரும் இந்தியாவை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அதிரடியாக விளையாடி வீழ்த்தி சாதனை படைக்கும் முனைப்புடன் விளையாட உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து இந்த தொடரை வெல்ல விரும்பினால் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை விரைவாக ஆட்டமிழக்க செய்ய வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்தியாவில் ரோஹித் சர்மாவுக்கு பந்துவீசுவது மிகவும் கடினமாக இருக்கும். அவர் தனது மைண்ட் செட், ஷாட் தேர்வு மற்றும் பந்தை அடிக்கும் திறன்ஆகியவற்றில் சிறந்தவர்.
டர்னிங் பிட்ச்களில் எதிர் தாக்குதல் நடத்தும் அவரது திறமை, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை பின்னுக்குத் தள்ளும். சுழலுக்கு சாதகமான மைதானங்களில் அவர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் போல அதிரடியாக விளையாடுவார். அவருடைய புள்ளி விவரங்களும் நம்ப முடியாததாக இருக்கிறது. எனவே வேகப்பந்து வீச்சாளர்கள் அவரை முன்கூட்டியே வெளியேற்றுவது மிகவும் முக்கியம்.
அதாவது எதிர் தாக்குதல் என்று வரும்போது ரோஹித்தை விட சிறந்தவர் யாரும் இல்லை. 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் பேட்டிங் செய்வதைப் பார்த்தோம். அவர் தனது ஆட்டத்தை மாற்றிக்கொண்டார். அதற்கெற்றது போல் இந்திய அணியும் உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டியை எட்டியது என்பதை யாரும் மறந்துவிட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.