ஐசிசி விருது 2021: ஆண்டின் சிறந்த டி20 வீரர்களுக்கான பட்டியல் வெளியீடு!
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
அதன்படி 2021ஆம் ஆண்டின் சிறந்த டி29 வீரர்களுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், இலங்கையில் வநிந்து ஹசரங்கா, ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் ஆகியோரது பெயர்களை ஐசிசி பரிந்துரை செய்துள்ளது.
இதில் பாகிஸ்தானின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் நடப்பாண்டில் சிறப்பான ஆட்ட்டத்தை வெளிப்படுத்தி 29 போட்டிகளில் 1,326 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளார். இதில் ஒரு சதமும் அடங்கும்.
இலங்கை அணியின் வளர்ந்துவரும் ஆல் ரவுண்டரான வநிந்து ஹசரங்கா, டி20 உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், நடப்பாண்டில் மட்டும் 36 விக்கெட்டுகளையும். 196 ரன்களையும் சேர்த்துள்ளார்.
அதேபோல் ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ், டி20 உலகக்கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார். மேலும் நடப்பாண்டில் 627 ரன்களைக் குவித்துள்ள மார்ஷ், 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இங்கிலாந்தின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் நடப்பாண்டி 14 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 589 ரன்களை சேர்த்துள்ளார். இதன் காரணமாகவே இவர்களது பெயர் ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 வீரருக்கான விருது பட்டியலில் இடம்பிடித்துள்ளது.