கோலி - ரோஹித் மோதலா? இது முட்டாள் தனமானது - சுனில் கவாஸ்கர்

Updated: Mon, Feb 07 2022 22:19 IST
"Nonsense": Sunil Gavaskar's Strong Statement On Rohit Sharma-Virat Kohli Rift "Stories" (Image Source: Google)

ரோஹித் - கோலி இடையே பனிப்போர் நடந்துவருவதாகவும் அவர்கள் இருவருக்கும் இடையே மோதல் என்றும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பேசப்பட்டுவருகிறது.

ரோஹித் - கோலி தலைமையில் இந்திய அணி 2 பிரிவாக பிரிந்து இருப்பதாகவும் பேசப்பட்டது. ஆக மொத்தத்தில் ரோஹித் - கோலி இடையே நல்லுறவு இல்லை என்று தொடர்ச்சியாக ஊடகங்களில் பேசப்பட்டே வந்தன.

கோலி இந்திய அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய பின்னர், ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டபோதும் கூட, இதே கருத்துத்தான் பேசப்பட்டது. ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவருமே தங்களுக்கு இடையே மோதல் என்ற கருத்தை தொடர்ந்து மறுத்துவந்தபோதிலும், அந்த பேச்சு மட்டும் நின்றபாடில்லை.

ஆனால் ரோஹித்தின் கேப்டன்சியில் விளையாடிய விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோஹித்துக்கு தேவையான நேரத்தில் அவருக்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருந்தார். யுஸ்வேந்திர சாஹலின் பவுலிங்கில் ப்ரூக்ஸுக்கு அவுட் சைட் எட்ஜ் ஆகி பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது. அதை ரிஷப் பந்த் பிடித்துவிட்டார். 
ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. விராட் கோலி தான், ரோஹித் சர்மாவிடம் சென்று கண்டிப்பாக டிஆர்எஸ் எடுக்கலாம் என்று கூறினார். கோலியின் ஆலோசனையை ஏற்றுத்தான் ரோஹித் ரிவியூ எடுத்தார். அது கேட்ச் என்பதால் அவுட் என்று முடிவு வந்தது.

ரோஹித் - கோலி இடையே மோதல் என்று பரபரப்பாக பேசப்பட்டுவந்த நிலையில், ரோஹித் - கோலி ஆலோசித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதுடன் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியளித்தது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் ரோஹித் - கோலி இணைந்து செயல்பட்டதை பார்த்த பின் இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், “ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவருமே இந்தியாவிற்காகத்தான் ஆடுகிறார்கள். அவர்களுக்கு இடையே நல்ல புரிதல் இல்லை, மோதல் என்பதெல்லாம் முழுக்க முழுக்க கற்பனை தான். 

ரோஹித் - கோலி இடையே மோதல் என்ற பேச்சு கடந்த சில ஆண்டுகளாகவே இருந்துவருகிறது. ஆனால் அவர்கள் இருவருமே இதை கண்டுகொள்வதில்லை. ஏனெனில் உண்மை என்னவென்று அவர்களுக்குத்தான் தெரியும்.

அணியில் இருக்கும் ஒரு வீரர் தனக்கு அடுத்த கேப்டனாக வருவதை, எந்தவொரு கேப்டனும் விரும்புவதில்லை என்று பேசப்படுவது முட்டாள்தனமானது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை