பாகிஸ்தானுக்கு எதிராக வாய்ப்பு கிடைக்காதது உண்மையில் ஏமாற்றம் அளித்தது- ஜோர்டன் காக்ஸ்!
இங்கிலாந்து அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்படி இத்தொடரின் முடிவில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதுடன், வெஸ்ட் இண்டீஸ் அணியையும் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. இதனையடுத்து அந்த அணி இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதி முடிவடையவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இரு அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியானது நேற்றைய தினம் இங்கிலாந்து சென்றடைந்ததுடன், இன்று முதல் பயிற்சியை தொடரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெற இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து நட்சத்திர வீரர் ஸாக் கிரௌலி காயம் காரணமாக விலகியதையடுத்து, அறிமுக வீரரான ஜோர்டன் காக்ஸ் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். இந்நிலையில் தனது அறிமுக வாய்ப்பு குறித்து ஜோர்டன் காக்ஸ் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், “இத்தொடருக்கு நான் தேர்வானது குறித்து அணியின் பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் என்னிடம், ‘எங்களுக்கு ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரர்கள் வேண்டும், அதைத்தான் நீங்கள் செய்து வருகிறீர்கள், மறக்காமல் உங்களூடைய கோல்ஃப் கிளப்பையும் கொண்டு வாருங்கள்’ என்று கூறினார். முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின் போதே எனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தேன்.
ஆனால் அத்தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்காதது சற்று ஏமாற்றமாக இருந்தது. இம்முறை நான் அப்படி எதையும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை. அதேசமயம் இந்த டெஸ்ட் தொடரில் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு மிகப்பெரிய ஒன்றாக இருக்கும். இத்தொடரின் போது எங்களின் தலைசிறந்த வீரர்களுடன் பயணிப்பதுடன், இந்த சில வாரங்களில் நான் எவ்வளவு அனுபவத்தைப் பெற முடியும், எவ்வளவு கற்றுக்கொள்ள முடியும்? என்பது குறித்து தான் தற்சமயம் யோசித்தவருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இதுவரை 51 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள ஜோர்டன் காக்ஸ் 7 சதம், 12 அரைசதங்கள் என மொத்தமாக 3,039 ரன்களை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி டி20 கிரிக்கெட்டில் 103 போட்டிகளில் விளையாடி 8 அரைசதங்களுடன் 2,025 ரன்களையும் அடித்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் அணி சமீபகாலமாக அதிரடியான அணுகுமுறையை வெளிப்படுத்தி வருவதன் காரணமாக, ஜோர்டன் காக்ஸுக்கு தற்சமயம் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.