NZ vs AUS, 1st T20I: பவுண்டரி மழை பொழிந்த ரச்சின், கான்வே; ஆஸிக்கு 216 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி இன்று வெலிங்டனில் தொடங்கியது. நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பந்துவீச அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஃபின் ஆலன் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கத்திலேயே அதிரடி காட்டியதன் மூலம் முதல் 6 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி 68 ரன்களை குவித்தது. இதற்கிடையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஃபின் ஆலன் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 32 ரன்கள் சேர்த்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் டெவான் கான்வேவுடன் இணைந்த ரச்சின் ரவீந்திராவும் அதிரடி காட்டினார். தொடர்ந்து இருவரும் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித்தள்ள அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் டெவான் கான்வே தனது அரைசதத்தை பதிவுசெய்த நிலையில், மறுபக்கம் அபாரமாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 29 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
மேலும் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்து அணியை வலிமையான நிலைக்கு கொண்டு சென்றனர். பின்னர் 2 பவுண்டரி 6 சிக்சர்கள் என 68 ரன்களில் ரச்சின் ரவீந்திரா தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 63 ரன்களைச் சேர்த்திருந்த டெவான் கான்வேவும் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரில் இவர்கள் இருவரும் சிஎஸ்கே அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா இருவரும் வலிமையான ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு எதிராக அரைசதம் கடந்துள்ளது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் ஜோடி சேர்ந்த கிளென் பிலீப்ஸ் - மார்க் சாப்மேன் ஆகியோரும் அதிரடியாக விளையாட, 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிளென் பிலீப்ஸ் 19 ரன்களையும், மார்க் சாப்மேன் 17 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.