NZ vs AUS, 2nd T20I: நியூசிலாந்தை பந்தாடி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

Updated: Fri, Feb 23 2024 15:14 IST
Image Source: Google

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையெயான இரண்டாவது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் - ஸ்டீவ் ஸ்மித் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் முதல் ஓவரிலிருந்தே பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி அதிரடி காட்டினார். மறுப்பக்கம் ஸ்டீவ் ஸ்மித்தும் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என விளாசினார். அதன்பின் ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீசிய லோக்கி ஃபெர்குசன் முதல் பந்திலேயே 11 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின் டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்த கேப்டன் மிட்செல் மார்ஷும் அதிரடியாக விளையாடினார்.

இதில் தொடந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 பவுண்டரி, 5 சிச்கர்கள் என 45 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வல் 6 ரன்களுக்கும், மிட்செல் மார்ஷ் 26 ரன்களுக்கும், ஜோஷ் இங்கிலிஸ் 5 ரன்களுக்கும், மேத்யூ வேட் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த டிம் டேவிட் மற்றும் பாட் கம்மின்ஸ் இணை ஓரளவு தாக்குப்பிடிக்க ஆஸ்திரேலிய அணியும் சவாலான ஸ்கோரை நோக்கி நகர்ந்தது. பின் 17 ரன்கள் எடுத்திருந்த டிம் டேவிட்டும் தனது விக்கெட்டை இழந்தார்.

அவரைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட பாட் கம்மின்ஸும் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஸாம்பா, ஹசில்வுட் ஆகியோரும் லோக்கி ஃபெர்குசன் வேகத்தில் வீழ்ந்தனர். இதனால் 19.5 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய லோக்கி ஃபெர்குசன் 4 விக்கெட்டுகளையும், பென் சியர்ஸ், மிட்செல் சாண்ட்னர், ஆடம் மில்னே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அதிலும் அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் டெவான் கான்வே காயம் காரணமாக பேட்டிங் செய்ய வரவில்லை என்பதால், ஃபின் ஆலன் - வில் யங் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ஃபின் ஆலன் 6 ரன்களிலும், வில் யங் 5 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் மிட்செல் சாண்ட்னரும் 7 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் களமிறங்கிய கிளென் பிலீப்ஸ் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினாலும், மறுபக்கம் களமிறங்கிய மார்க் சாப்மேன் 2, ஜோஷ் கிளார்க்சன் 10, ஆடம் மில்னே ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிளென் பிலீப்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 42 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய டிரெண்ட் போல்ட் தனது பங்கிற்கு 16 ரன்களைச் சேர்க்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 17 ஓவர்களில் 102 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நியூசிலாந்து அணி ஆல் அவுட் என அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளையும், நாதன் எல்லிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை