NZ vs AUS, 2nd Test: ஆஸி 256 ரன்களில் ஆல் அவுட்; கம்பேக் கொடுக்கும் நியூசிலாந்து!

Updated: Sat, Mar 09 2024 12:53 IST
Image Source: Google

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.  அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி இப்போட்டியில் பேட்டிங்கில் பெரிதளவில் சோபிக்க தவறியது. இதனால் முதல் இன்னிங்ஸில் 45.2 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ண்டு 162 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜோஷ் ஹசில்வுட் 5 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் - உஸ்மான் கவாஜா ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்டீவ் ஸ்மித் 11 ரன்களிலும், உஸ்மான் கவாஜா 16 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய கேமரூன் க்ரீன் 25 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 21 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர்.

இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களை எடுத்தது. இதையடுத்து இன்று தொடங்குய இரண்டாம் நாள் ஆட்டத்தில் மார்னஸ் லபுஷாக்னே 45 ரன்களுடனும், நாதன் லையன் ஒரு ரன்னுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் நாதன் லையன் 20 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த மார்னஸ் லபுஷாக்னேவும் 90  ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய மிட்செல் ஸ்டார்க் 28, பாட் கம்மின்ஸ் 23 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 256 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 86 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூசிலாந்து அணியில் வில் யங் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டாம் லேதம் - கேன் வில்லியம்சன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்ததுடன், அணிக்கும் முன்னிலைப் பெற்றுக்கொடுத்தனர். 

பின்னர் 51 ரன்கள் எடுத்த நிலையில் கேன் வில்லியம்சன் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்துள்ளது. இதில் டாம் லேதம் 65 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 40 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை