NZ vs AUS, 2nd Test: 162 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து; முன்னிலை நோக்கி நகரும் ஆஸ்திரேலியா!

Updated: Fri, Mar 08 2024 12:16 IST
NZ vs AUS, 2nd Test: 162 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து; முன்னிலை நோக்கி நகரும் ஆஸ்திரேலியா! (Image Source: Google)

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டியில் விளையாடுவதன் மூலம் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்கள் கேன் வில்லியம்சன், அணியின் கேப்டன் டிம் சௌதீ ஆகியோர் தங்களது 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடினர். 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி இப்போட்டியில் பேட்டிங்கில் பெரிதளவில் சோபிக்க தவறியது. அந்த அணியின் தொடக்க வீரர் வில் யங் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான டாம் லேதமும் 38 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் அடுத்து தனது 100ஆவது போட்டியில் விளையாடிய கேன் வில்லியம்சன் வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

பின்னர் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 04, டெரில் மிட்செல் 04, டாம் பிளண்டல் 22, கிளென் பிலீப்ஸ் 02 போன்ற பேட்டர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 45.2 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ண்டு 162 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜோஷ் ஹசில்வுட் 5 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் - உஸ்மான் கவாஜா ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்டீவ் ஸ்மித் 11 ரன்களிலும், உஸ்மான் கவாஜா 16 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய கேமரூன் க்ரீன் 25 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 21 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்தனர்.

இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களை எடுத்துள்ளது. இதில் மார்னஸ் லபுஷாக்னே 45 ரன்களுடனும், நாதன் லையன் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 38 ரன்கள் பின் தங்கிய நிலையில் நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை