நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மங்குனியில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் டாம் லேதம் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்தர் வில் யங் - டேவன் கான்வே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
பின் 51 ரன்களில் வில் யங் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த டேவன் கான்வே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் 122 ரன்களில் கான்வே ஆட்டமிழக்க, அடுத்து வந்த ராஸ் டெய்லர் 31, டாம் பிளண்டல் 11 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் ஷொரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.