NZ vs ENG, 1st Test: ஹாரி புரூக் அசத்தல் சதம்; முன்னிலை நோக்கி நகரும் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்தை பேட்டிங் செய்யுமாறும் அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டெவான் கான்வே 2 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டாம் லேதம் 47 ரன்களுக்கும், 33 ரன்னில் ரச்சின் ரவீந்திராவும், 19 ரன்னி டேரில் மிட்செலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதற்கு மத்தியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேன் வில்லியம்சன் சதம்டிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 93 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.பின்னர் ஜோடி சேர்ந்த டாம் பிளெண்டர் - கிளென் பிலீப்ஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் கிளென் பிலீப்ஸ் அதிரடியாக விளையாட, மறுபக்கம் டாம் பிளெண்டல் 17 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் நாதன் ஸ்மித் 3 ரன்களிலும், மேட் ஹென்றி 18 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்களைக் குவித்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய கிளென் பிலீப்ஸ் தனது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 58 ரன்களைச் சேர்த்தார்.
ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஷொயப் பஷீர் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸாக் கிரௌலி ரன்கள் ஏதுமின்றியும், ஜேக்கப் பெத்தல் 10 ரன்னிலும் ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட்டும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் பென் டக்கெட்டுடன் இணைந்த ஹாரி புரூக் சிறப்பான ஆட்டத்தி வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் 46 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் புரூக்குடன் இணைந்த ஒல்லி போப்பும் அதிரடியாக விளையாடியதுடன், இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்தும் அசத்தினர். பின் 77 ரன்கள் எடுத்த கையோடு ஒல்லி போப் அட்டமிழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
அவருடன் இணைந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 319 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஹாரி புரூக் 132 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி தரப்பில் நாதன் ஸ்மித் 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதீ, மேட் ஹென்றி, வில்லியம் ஓ ரூர்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இதனைய்டுத்து 29 ரன்கள் பின் தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.