இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் ராபின்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிம் ராபின்சன் 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 8 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய மார்க் சாப்மேன் 15 ரன்களுக்கும், கிளென் பிலீப்ஸ் 8 ரன்களுக்கும், மிட்செல் ஹெய் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் நியூசிலாந்து அணி 65 ரன்களில் 5  விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். ஒருகட்டத்திற்கு மேல் பிரேஸ்வெல் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். மறுமுனையில் டேரில் மிட்செல் பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் அதிரடியாக விளையாடிய பிரேஸ்வெல் 28 பந்துகளிலும், டேரில் மிட்செல் 35 பந்துகளிலும் என தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர்.

இதன்மூலம் இருவரும் 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் டேரில் மிட்செல் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 59 ரன்களை எடுத்த நிலையில் மைக்கேல் பிரேஸ்வெல்லும் விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மஹீஷ் தீக்ஷனா, பினுரா ஃபெர்னாண்டோ மற்றும் வநிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். இப்போட்டியில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பதும் நிஷங்கா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவாரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், குசால் மெண்டிஸ் 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் இரண்டு பந்துகளை மட்டுமெ எதிர்கொண்ட நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்ட,அடுத்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து 3 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் சரித் அசலங்கா ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த பதும் நிஷங்காவும் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 90 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் அணியின் நம்பிக்கையாக இருந்த ராஜபக்ஷவும் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார்.

Advertisement

இதனால் இலங்கை அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கடைசி ஓவரில் இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, இறுதியில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி, ஸகாரி ஃபால்க்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News