NZ vs SL, 2nd T20I: செய்ஃபெர்ட், மில்னே அபாரம்; தொடரை சமன்செய்தது நியூசிலாந்து!

Updated: Wed, Apr 05 2023 10:56 IST
Image Source: Google

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று துனெடினில் நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 9 ரன்களிலும், குசால் மெண்டீஸ் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த குசால் பெரேரா - தனஞ்செயா டி சில்வா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

பின் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குசால் பெரேரா 35 ரன்களிலும், தனஞ்செய டி சில்வா 37 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சரித் அசலங்கா 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து வந்த கேப்டன் தசுன் ஷனகாவும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதன்பின் வந்த வீரர்களும் நியூசிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் இலங்கை அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் மில்னே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சாட் பௌஸ் - டிம் செய்ஃபெர்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாட் பௌஸ் 31 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

ஆனாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் செய்ஃபெர்ட் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய செய்ஃபெர்ட் 43 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 79 ரன்களையும், கேப்டன் டாம் லேதம் 20 ரன்களையும் சேர்க்க, நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. 

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன்செய்துள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி ஏப்ரல் 8ஆம் தேதி குயின்ஸ்டவுனில் நடைபெறவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை