NZW vs SLW, 1st T20I: அத்தபத்து அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!

Updated: Fri, Mar 14 2025 20:01 IST
NZW vs SLW, 1st T20I: அத்தபத்து அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!
Image Source: Google

இலங்கை மகளிர் அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. 

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று (மார்ச் 14) தொடங்கியது. அதன்படி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து  அணிக்கு கேப்டன் சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிலிம்மர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜார்ஜியா 2 ரன்கள் மட்டுமெ எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் பேட்ஸுடன் இணைந்த எம்மா மெக்லெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. பின் 21 ரன்கள் எடுத்த நிலையில் சூசி பேட்ஸ் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட எம்மா மெக்லெட்டும் 44 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, நியூசிலாந்து மகளிர் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை தரப்பில் மல்கி மதரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை மகளிர் அணிக்கு கேப்டன் சமாரி அத்தப்பத்து மற்றும் விஷ்மி குணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அத்தபத்து ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் விஷ்மி குணரத்னே 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹர்ஷிதா சமரவிக்ரமா 2 ரன்களுக்கும், கவிஷா தில்ஹாரி 12 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இலங்கை மகளிர் அணி 66 ரன்களிலேயே 3  விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Also Read: Funding To Save Test Cricket

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சமாரி  அத்தபத்து தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அத்தபத்து 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 64 ரன்களையும், நிலாக்‌ஷி டி சில்வா 12 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 14.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி டி20 தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை